சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது.
வைரஸ் தொற்றைத் தடுக்க சுவிஸ் சமஷ்டி அரசின் சட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்த நாட்டு மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
சுவிஸ் நாட்டின் நேரடி ஜனநாயக முறை இப்படி ஒரு கருத்துக்கணிப்பை நடத்த அனுமதிக்கிறது. மாற்றத்தைக் கோரும் மனு ஒன்றில் போதுமான எண்ணிக்கையானோர் கையெழுத்திட்டால் அதை வாக்கெடுப்புக்கு விட்டு முக்கிய கொள்கை மாற்றங்களை மக்களுக்கு வழங்க சுவிஸின் அசாதாரண ஜனநாயக முறை வாய்ப்பளிக்கிறது.
8.5மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிஸ் நாட்டில் ஏதாவது ஒரு பொது விவகாரம் தொடர்பாக 50 ஆயிரம் பேரின் கையொப்பங்களைச் சேகரித்து அதனை அரசிடம் சமர்ப்பித்தால் அந்த விடயம் தொடர்பாக நாடளாவிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
“அரசமைப்பின் நண்பர்கள்” (Friends of the Constitution) என்ற மக்கள் இயக்கம் 86 ஆயிரம் பேரது ஒப்புதலுடன் ‘கோவிட் 19’ விவகாரத்தை பொது வாக்கெடுப்புக்குச் சமர்ப்பித்துள்ளது. அது ஏற்றுக்கொள்ளப் பட்டால் வரும் ஜூன் மாதத்துக்கு முன்பாக ஒரு வாக்களிப்பு நடத்தப்படும்.
வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் தடுப்பூசியை கட்டாயமாக்குவதுடன் போதியளவு பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப் படாத தடுப்பு மருந்தின் பாவனையை அனுமதிக்கிறது என்ற அச்சம் தமக்கு எழுந்துள்ளதாக வாக்கெடுப்பு ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தடுப்பு மருந்து அனைவருக்கும் கட்டாயம் அல்ல என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஐரோப்பா உட்பட பல நாடுகளிலும் அரசுகளது நடவடிக்கைகள் இவை போன்ற கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டிருக்கின்ற நிலையில் சுவிஸில் நடைபெறப்போகின்ற வாக்கெடுப்பின் தீர்ப்பு முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைரஸ் நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஏனைய பல நாடுகளைப் போன்று சுவிஸ் அரசும் தொடர்ச்சியாக அமுல் செய்துவந்த சுகாதாரக் கட்டுப்பாடுகள் தங்களது சுதந்திரத் துக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பெரும்பாலான சுவிஸ் மக்கள் கருதுகின்றனர் என்று கூறப்படுகிறது.