இரவு, பகல் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த கணவரை, உணவில் விஷம்வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், அந்தியூரிலுள்ள அந்தியூர் கொலனி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (35). அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துகொண்டும், தனியார் மாவு மில் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டும் இருந்திருக்கிறார்.
இவருக்குக் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பவானி அருகேயுள்ள பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த 20 வயதான பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 15 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்து, இரண்டாவதாக நந்தகுமாரைத் திருமணம் செய்திருக்கிறார்.
அந்தப் பெண் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில், ஜனவரி 31-ம் திகதி நந்தகுமார் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்தியூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உடனே, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
அங்கு நடந்த பரிசோதனையில் நந்தகுமாருடைய ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே பொலிஸ் மற்றும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், நந்தகுமாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
`ஜனவரி 28-ம்திகதி என்னோட தோட்டத்துல பயிர்களுக்கு மருந்து அடிச்சுட்டு வீட்டுக்குச் சாப்பிட வந்தேன். சாப்பாடு கசக்குற மாதிரி இருந்தது. அப்பவே என் பொண்டாட்டிக்கிட்ட ஏன் சாப்பாடு கசக்குதுன்னு கேட்டேன். `அப்படில்லாம் ஒண்ணும் இல்லையே’ன்னு சொன்னா. அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் என் உடல்நிலை இப்படி ஆச்சு’ என்று வாக்குமூலம் கொடுத்த நந்தகுமார், அவருடைய மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தீவிர சிகிச்சையில் இருந்த நந்தகுமார், சிகிச்சை பலனின்றி பெப்ரவரி 15-ம் திகதி உயிரிழந்தார். அதன் பிறகு நந்தகுமாரின் மனைவியிடம் பொலிஸ் பலமுறை விசாரித்தும் எந்தவிதக் கூடுதல் தகவலும் கிடைக்காமல் இருந்திருக்கிறது.
இந்தநிலையில், பிப்ரவரி 18-ம் திகதி மறுபடியும் நந்தகுமாரின் மனைவியை அந்தியூர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். மருத்துவ அறிக்கையைவைத்து பொலிஸ் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த, `நந்தகுமாருக்கு உணவில் விஷம் வைத்து நான்தான் கொலை செய்தேன்’ என உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையில், நந்தகுமாரின் மனைவி பொலிஸிடம், `திருமணமான புதிதில் செக்ஸ் வைத்துக்கொள்வதில் ஆர்வமில்லாமல் இருந்த என்னுடைய கணவர், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு இரவு, பகல் பாராமல் எனக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து தொந்தரவு செய்தார். நான் கர்ப்பமான பிறகு தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் என்னுடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல்தான் குழம்பில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்து என்னுடைய கணவரைக் கொலை செய்தேன்’ எனத் தெரிவித்துள்ளார். அதையடுத்து அவர் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
நன்றி; விகடன்