தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத வகையில் பெய்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. அந்த மழை ஓய்ந்து கொஞ்சம் நாட்களாக மழை இல்லாமல் இருந்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த சூழலில், சென்னையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பல இடங்கள் குளம் போல் காட்சியளித்தன. சென்னை தலைமை செயலகத்திற்கு உள்ளும் மழைநீர் புகுந்தது. அறைகளுக்குள் நீர் புகுந்ததால், ஊழியர்கள் வெளியேறினர். அண்ணா மேம்பாலத்தில் கனமழையால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் காலையில் வெயில் சுட்டெறித்த நிலையில், மதியத்திற்கு மேல் மழை கொட்டியது. அங்கு இன்று ஒரேநாளில் மட்டும் 20 செ.மீ.,க்கு மேலாக மழைப் பெய்துள்ளது. மயிலாப்பூரில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். இன்னும் மழை பெய்துக்கொண்டிருப்பதால் இதன் அளவு மேலும் அதிகரிக்கலாம்.