அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் (78) இன்று பதவியேற்கவுள்ளார்.
தலைநகர் வொஷிங்டன் டிசியில், நாடாளுமன்றம் அமைந்துள்ள யூ.எஸ்.கெப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியே அமெரிக்க கிழக்குப் பிராந்திய நேரப்படி நண்பகலில் (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு) இப்பதவியேற்பு வைபவம் நடைபெறவுள்ளது.
உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹரிஸும் (56) இன்று பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் உப ஜனாதிபதியாகிறார் கமலா ஹரிஸ்.
அமெரிக்க உப ஜனாதிபதியாக பதவியேற்கும் முதலாவது ஆசிய, ஆபிரிக்க இனத்தவரும் கமலா கமலா ஹரிஸ். ஆவார்.
1937 இலிருந்து ஜனவரி 20 ஆம் திகதியில் அமெரிக்க அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின்படி, 1937 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஜனாதிபதிகள் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக அமைந்தால் அன்றைய தினம் பிரத்தியேகமாக பதவிப் பிரமாணம் செய்தபின், மறுநாளான ஜனவரி 21 ஆம் திகதி பகிரங்க பதவியேற்பு வைபவம் நடத்தப்படும்.
இம்முறை, ஜனாதிபதித் தேர்தலில் 2 ஆவது தடவையாக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள நீண்டகாலமாக மறுத்து வந்தார். அவரின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறைகளிலும் ஈடுபட்டனர். பின்னர் அவர் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ஜோ பைடனின் இன்றைய பதவியேற்பை முன்னிட்டு, கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிகழ்வின்போது உள்வட்டார தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக, வொஷிங்டன் டிசியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 25,000 தேசிய காவல் படையினர் தொடர்பிலும் எவ்.பி.ஐ. புலனாய்வு அமைப்பு விசேட சோதனை, புலனாய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.