இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்த ஒருநாள் கழித்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கொள்கலன் முனையமாக கிழக்கு கொள்கலன் முனையத்தை இயக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியிருந்தது.
கிழக்கு கொள்கலன் முனையத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் அதன் செயற்பாட்டை 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் வைத்திருக்க அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் மற்றும் இந்தியாவுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை கடைபிடிக்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு என இந்தியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.