தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
போட்டியில் பங்கேற்ற காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே களத்தில் இறக்கப்பட்டன. வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்த பிறகே களத்தில் இறக்கப்பட்டனர்.
போட்டியில் பங்கேற்க 750 காளைகள், 550 காளையர்கள் தேர்வாகி இருந்தனர். மாடுபிடி வீரர்கள் சுற்று வாரியாக களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் ஆர்வத்துடன் களம் இறங்கி காளைகளை அடக்கினர்.
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டிருந்தன. அவைகளும் களத்தில் நின்று விளையாடி பரிசுகளை தட்டிச்சென்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பிரிட்ஜ், பீரோ, டி.வி., பித்தளை பாத்திரங்கள், நாற்காலிகள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றி – மாலைமலர்