1996ம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் பத்திரிக்கையில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா என்ற கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியான பின்பு தான் ‘ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் ஷங்கருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகாத, இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியானது. தாம் எழுதிய கதை திருடப்பட்டு, இப்படம் இயக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ், வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளதாகவும், ஷங்கருக்கு எதிரான வழக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தலாம் எனவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் 10 ஆண்டுகளாக ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு, ஜாமீனில் வெளிவராதபடி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.