மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட இந்த ஆணைக்குழுவில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்திரா பெர்னான்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமால் அபேசிறி ஆகியோரும் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் செயலாளர் ஜயசுந்தரவினால் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் நாள் தொடக்கம், நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஆணைக்குழு, ஆறு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள், ஏதேனும் மனித உரிமை மீறல்கள், மோசமான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனவா என்பதைக் கண்டறியுமாறும்,
மோசமான மனித உரிமை மீறல்கள், கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் இதுபோன்ற பிற குற்றங்கள் தொடர்பாக, ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டறிவுகள் குறித்த உண்மைகளை எவ்வாறு கையாளுவது என்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை அடையாளம் காணுமாறும்,
தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரைகள் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள விதம் மற்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, அந்த பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு எவ்வாறான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும், இந்த ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.