ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக உலக நாடுகளின் முக்கியத்துவம் குறித்து இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் வேக்கியோ டொமினிக், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 19.02.2021 அன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கூறுகையில்,
ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக உலக நாடுகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது. 30/1 34/1 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக இப்பொழுது வரப்போகின்ற தீர்மானம் இலங்கைக்கு என்ன படிப்பினையினை கொடுக்கும் அல்லது எவ்வாறு இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தொல்பொருள் திணைக்களங்களின் ஊடான நிலப்பரப்புக்கள் வனவள திணைக்களத்தின் ஊடான நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அரசாங்கத்தினுடைய மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டும் அல்லாது அவர்களின் இருப்புக்களையும் அரசாங்கம் கேள்விக்குறியாக்குவது தொடர்பாகவும், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது என்பதற்கான எழுத்து மூல கடிதத்தினை நாங்கள் சுவீஸ் தூதுவரிடம் கையளித்து இருந்தோம்.
அதனை அவர் ஏற்றுக்கொண்டதுன், எமது மக்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் தப்போதும் அவ்வாறான எண்ணம் தமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார் என்றனர்.