ஜேர்மனியின் தென் கிழக்கு மாநிலமான பவாறியாவில் மருத்துவமனையில் 35 நோயாளிகளுக்கு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பவாறியாவில் Garmisch-Partenkirchen என்னும் பனிச்சறுக்கல் விளையாட்டு நகரில் உள்ள மருத்துவமனையிலேயே 75 தொற்றாளர்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 35 பேருக்கு குழப்பமான புதிய தொற்று அறியப்பட்டிருக்கிறது.
அது இங்கிலாந்து மற்றும் தென்னா பிரிக்கா வகையைச் சேர்ந்த அல்லது வேறு புதிய வகை வைரஸா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை – பவாறியா மாநில அரசு புதிய வைரஸ் தொற்றைத் தடுக்கு முகமாகப் பொதுப் போக்குவரத்து களிலும் மற்றும் கடைத் தொகுதிகள் போன்ற இடங்களிலும் FFP2 என்னும் காற்று வடிகட்டும் தன்மை அதிகம் உள்ள முகக் கவசங்களை அணியுமாறு தனது மக்களைக் கேட்டுள்ளது.
தற்சமயம் பாவனையில் உள்ள சாதாரண மாஸக்குகளும் மக்கள் துணியில் தாங்களே தைத்து அணிந்து கொள்ளும் முகக் கவசங்களும் தீவிர தொற்றும் தன்மைகொண்ட புதிய வைரஸைக் கட்டுப்படுத்த போதாது என்று அறிவியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்தே FFP2 வகை மாஸ்க்குகள் அங்கு கட்டாய பாவனைக்குக் கொண்டுவரப் பட்டுள்ளன.
சாதாரண மாஸ்க்குகளை விட விலை உயர்ந்த FFP2 வகை மாஸ்க்குகள் (full protective filter masks) சுவாசக்காற்றை முழு அளவில் சுத்திகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை.
பவாறியாவைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பொதுப் போக்குவரத்து களில் இந்த வகை மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கும் யோசனையை ஜேர்மனிய அரசு பரிசீலித்து வருகின்றது. அயல் நாடான ஒஸ்ரிய அரசு பொதுப் போக்குவரத்துகளில் பயணிகள் FFP2 மாஸ்க் அணிவதை ஜனவரி 25 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கி உள்ளது.