எகிப்து நாட்டின், அலெக்சாண்ட்ரியா பகுதியில் உள்ள டபோசிரிஸ் மேக்னா கோயிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2000 வருடப் பழமையான தங்க நாக்கு கொண்ட மம்மி கண்டெடுக்கப்பட்டது.
எகிப்து மற்றும் டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தின் பழம்பெரும் கோயில்களில் கடந்த 10 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 16 புதையிடங்களைக் கண்டறிந்துள்ளனர்.
மொத்தம் 19 மம்மிகளை தோண்டி எடுத்துள்ளனர். அப்போது ஒரே ஒரு மம்மியின் வாயில் மட்டும் தங்க நாக்கு இருப்பதைப் பார்த்துள்ளனர். உடனே அந்த மம்மியை எடுத்து ஆராய்ந்ததில் அது 2,000 ஆண்டுகள் பழமையானது எனக் கண்டறியப்பட்டது. அதாவது கிரேக்கர்களும், ரோமானியர்களும் வாழ்ந்த காலகட்டத்தை சேர்ந்த நபராக இருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இந்த மம்மியின் மண்டை ஓடு மற்றும் உடலின் பிற பகுதிகள் எந்தவித சேதமும் அடையாமல் அப்படியே இருந்துள்ளது.
பழங்கால எகிப்து நாட்டில் இறந்தவர்களின் உடல்களை மனித உருவங்களைப் போன்று பெட்டிகள் செய்து, அதில் அவர்களின் ஆபரணங்கள் சிலவற்றை வைத்து அடக்கம் செய்யும் வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் தற்போது கண்டறியப்பட்ட மம்மியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தங்க நாக்கு என்பது புதுமையானதாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்த தங்கம் ஒளிர்ந்து கொண்டே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள எகிப்து நாட்டின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை அமைச்சகம், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைப் புதைக்கும் போது உண்மையான நாக்கை வெட்டி எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தங்க நாக்கு ஒன்றை வைத்து புதைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் இறந்த பிறகு எகிப்து கடவுளான ஒசிரிஸ் (Osiris) உடன் பேசும் ஆற்றலைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. இந்த மம்மி எளிதில் சேதமடையாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்து அடக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.