இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் பீடக்கூட்டம் வவுனியாவில் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் சி.வீ.கே.சிவஞானம், வைத்திய.ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், சிறிதரன், பொன்.செல்வராசா ஆகிய ஏழுபேரே கலந்து கொண்டனர். சம்பந்தன் உட்பட நான்கு பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென்று அரசியல் பீடம் ஏன் கூட்டப்பட்டது என்றொரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகின்றது. இந்தக் கூட்டம் முழுக்க முழுக்க தமிழரசுக்கட்சியினுள் காணப்படும் பிணக்குகளை தீர்ப்பதையே அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்கின்றது.
ஏனென்றால் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தலைமை உரையாற்றிய மாவை.சேனாதிராஜா, ‘பாரம்பரிய கட்சியான தமிழரசுக்கட்சி தமிழ் மக்களுக்காக உறுதியாக நிற்க வேண்டிய தற்போதைய தருணத்தில் உள்ளக ரீதியாக முரண்பாடுகளைக் கொண்டிருப்பதால் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆகவே நாம் ஒன்றுபட்டு நின்று கட்சியின் பாரம்பரியத்தினை காப்பாற்றி எமது மக்களுக்காக செயற்பட போகின்றோமா இல்லை வேறு நிகழ்ச்சி நிரல்களில் கட்சிக்குள் முரண்பட்டக் கொண்டு இருக்கப்போகின்றோம் என்பதை தீர்மானிக்க வேண்டும்’ என்று கூறி ஆரம்பித்திருந்தார்.
அதன் பின்னர், சுமந்திரனுக்கும், சி.வீ.கே.சிவஞானத்திற்கும் இடையில் சில கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்று முரண்பட்டு முட்டுப்பட்டுக்கொண்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட்டத்தின் முழு நேரத்தினையும் தன்னகப்படுத்தியதாக தகவல். அவருடைய வழமையான சரவெடி வார்த்தைகளில் கூடவே அதிபர் அனுபவத்தினையும் இந்தக் கூட்டத்தில் பயன்படுத்தியிருப்பதாக தகவல்.
முதலில், மாவை சேனாதிராஜாவுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் காணப்படும் பிச்சல் பிடுங்கல் பற்றி வெளிப்படையாக கூறியிருக்கின்றார். யாழ்.மாநகர சபையில் ஆர்னோல்ட்டை ஆதரிக்கும் முடிவினை மாவை சேனாதிராஜா எடுத்ததையும் அது பின்னடைவில் முடிவடைய சுமந்திரன் தலைமைக்கு கடிதம் எழுதி அதனை ஊடகங்களில் பகிந்தமையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சுமந்திரன் தலைமைக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் ஏற்பட்ட விளைவுகளால் தான் பொதுச்செயலாளராக இருந்த துரைராஜசிங்கம் பதவியை இழக்க வேண்டி வேண்டி ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு அவர் பதவி இறக்கப்பட்டமை தவறு என்றும் கூறியிருக்கின்றார்.
அத்துடன் மாவையிடம் பின்னர் தானும் அந்த சமயத்தில்தெரிவித்த கருத்துக்களை மன்னிபுக் கோரியதையும், சுமந்திரனும் அவ்வாறு மன்னிப்புக்கோரியதையும் இதன்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
தொடர்ந்து, சுமந்திரன் முதலமைச்சர் வேட்பாளராக துறைசார்ந்த நிபுணர்களை நாடித்திரிவதையும், அதுபற்றி கட்சிக்குள் கலந்துரையாடாது கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் கடுமையாக விமர்ச்சித்திருக்கின்றார்.
பின்னர், தான் கட்சியின் தலைமையை இலக்கு வைக்கவில்லை என்றும் அதனால் மாவை அண்ணை அச்சமடைய வேண்டியதில்லை என்றும் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமன்றி, மாவையின் மகன், கலைஅமுதன், பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றதன் பின்னர் சுமந்திரன் வாகனத்தினை தமது வீட்டுக்குள் அனுமதிகாது அவமதிதத்மை முதல் கட்சியின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வது பற்றியும் கண்டித்திருக்கின்றார்.
அத்துடன், மாவை.சேனாதிராஜாவுக்கு மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணமிருந்தல் அதனை தாராளமாகச் செய்ய முடியும் என்றும் ஆனால் தற்போதைக்கு அவருடைய மகனை கட்சி விடயங்களில் உள்வாங்குவதும், சம்பந்தியான சசிகலா ரவிராஜை மாகாண சபைத் தேர்தலில் களமிறக்கும் எண்ணம் கொண்டிருப்பதும் ‘குடும்ப அரசியல் தமிழரசுக் கட்சியிலும் உருவாகிவிடும் ஆபத்தை’ காண்பிப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஆகவே வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தான் மாவை.சேனாதிராஜாவை பிரேரிப்பதாகவும் இதில் யாருக்காவது பிரச்சினைகள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் வெளிப்படுத்தும் படியும் கூறியிருக்கின்றார். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு மயான அமைதியே நீடித்திருக்கின்றது. கூட்டத்தின் அமைதியைக் குலைத்த சிறிதரன், சி.வீ.கே. அண்ணருக்கு முதலமைச்சர் ஆசை இருந்தால் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
எனினும், சி.வீ.கே,சிவஞானம் ‘மாவை களமிறங்காது விட்டால் தான் அதற்கு பொருத்தமானவராக உள்ளளேன். களமிறங்கத் தயாராக இருக்கின்றேன்’ என்று பதிலளித்திருக்கின்றார்.
அதன்போது, ‘நீங்கள் முதலமைச்சராக போட்டியிட தயாராக இருக்கின்றேன். பல இடங்களில் அதுபற்றி பேசியிருக்கின்றீர்கள்’ என்று சிறிதரன் நேரடியாக கூறவும், ‘அவ்வாறு இல்லை’ என்று பதிலளித்திருக்கின்றார்.
தொடாந்த சிறிதரன், முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு நீங்களே கட்சியின் தலைவராகவும் இருங்கள். யாரும் அதனை தடுக்கப்போவதில்லை. வடக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் ஒருவர் அரசியல், விடுதலை உணர்வுடைய ஒருவரே வரவேண்டும். நிபுணர்கள் என்று வந்தவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்ற அனுபவம் எங்களுக்கு உள்ளது. ஆகவே நாங்கள் அத்தகைய ஒருவராக இருக்கும் மாவை அண்ணரையே அப்பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.
அவ்வாறு மாவை அண்ணர் ஐந்து வருடங்களுக்கு முதலமைச்சராக இருக்கின்றபோது அவருடை குடும்பத்தினர் தலையீடுகளைச் செய்யக்கூடாது என்றும் தான் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படவுள்ளேன் என்றும் கூறியிருக்கின்றார்.
மேலும் அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் தோல்வி உற்றமையும், சம்பந்தன் திருகோணமலையில் தோல்வி உற்றமையையும், மாவை அம்பாறையில் தோல்வி உற்றமையையும் சுட்டிக்காட்டிய சிறிதரன் தோல்விகள் நிரந்தரமல்ல என்றும் மாவைக்கு தேற்றமளித்திருக்கின்றார்.
இறுதியாக, நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகின்றீர்களா இல்வையா என்று நேரடியாகவே மாவையிடத்தில் சிறிதரன் கேட்கவும், ‘தம்பி நீங்கள் இவ்வளவு விடயங்களை வலியுறுத்துகின்றீர்கள். பலர் வெளிநாடுகளிலும் இதேகோரிக்கையை விடுக்கின்றனர். ஆகவே கடந்த முறை விட்ட தவறை நான் இம்முறை செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கின்றார்.
அச்சமயத்தில், இனிவரும் நாட்களில், மாவையும், சுமந்திரனும் மனம் விட்டு கலந்துரையாடி இருக்கும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் இருவரினது பங்களிப்பு கட்சிக்கு அவசியமானது என்றும் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமன்றி மவை அணி, சுமந்திரன் அணி என்று இனினும் பிளவுபட்டு சமூக ஊடகங்களில் முட்டுப்பட்டு முரண்பட்டால் நான் யாருடைய அணியிலும் இருக்காது ‘மக்கள் அணியில்’ ‘எனது தனி வழியில்’ செயற்படுவேன் என்றும் உரைத்துள்ளதோடு எனக்கு மக்கள் ஆதரவும் அவர்களின் அன்பும் போதுமானது என்றும் கூறியிருக்கின்றார்.
சிறிதரனின் மாவை,சுமந்திரன் ஆகியோரை திறந்த மனதுடன் கலந்துரையாடும் யோசனை முன்வைக்கப்பட்டபோது ‘நாங்கள் இப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம்’ என்று இருவரும் கோரஸாக சொல்லியுள்ளார்களாம்.
ஒட்டுமொத்தமாக, தமிழரசுக்கட்சியின் இந்த அரசியல் பீடக் கூட்டம், ஒற்றுமைக்கான வாயிலை திறப்பதையே மையப்படுத்தியதாக இருந்திருக்கின்றது.
இதனையடுத்து காணி அபகரிப்பு, தொல்லியல்துறை உள்ளிட்ட விடயங்களை கையாள்வதற்கு சமத்தலைவர்கள், சிவில் தரப்பினரை ஏற்பாடு செய்து மூன்று அரசியல் கூட்டுக்களும் இணைந்து செயற்படுவது பற்றியு முயற்சிகளை 13ஆம் அல்லது 14ஆம் திகதிகளில் முன்னெடுப்பதென்றும், 27ஆம் திகதி அளவில் மத்திய குழு கூட்டத்தினை கூட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.