வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை தெளிவான தீர்மானமொன்றை எடுக்குமாறும் புறக்கோடை புகையிரத நிலையத்திற்கு அருகில் 22.02.2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் தொடர்பாக தேசிய அமைப்பாளர் சானக்க பண்டார தெரிவித்ததாவது,
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு கீழேயே இயங்கிவருகின்றது. வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை, சீனா தங்களுக்கு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கை சீனாவின் காலத்துவ நாடாக மாறிவருவதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் இந்திய – சீனா போராட்டத்திற்கு மத்தியில் எமது நாட்டின் வளங்கள் வெளிநாட்டவருக்கு வசமாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் வடக்கிலுள்ள மூன்று தீவுகளையும், மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக தங்களுக்கு வழங்குமாறு சீனா கேட்கின்றது. இந்த தீவுகளின் மதிப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கும், நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் புரியவில்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த தீவுகள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்கப்படுமாயின், அந்த நாடுகளுக்கிடையில் காணப்படும் அதிகாரப் போராட்டத்திற்கு மத்தியில், ஏதாவது மோதல்கள் ஏற்படும் போது இலங்கையே பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவே பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரின் வெளிநாட்டு கொள்கைத்திட்டங்கள் தொடர்பில் நாம் அறிவோம். அதேபோன்று தற்போதைய அரசாங்கத்திடமும் தெளிவான தேசிய மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் காணப்படுமாயின் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படாது.
சீனா தெற்காசியா நாடுகளுக்கு மத்தியில் அனைத்து அதிகாரங்களையும் தம்வசப்படுத்திக் கொள்ள முயற்சித்து வரும் நாடு என்றும், நாட்டின் வர்த்தக பொருளாதார துறையில் பெரும் பகுதியை சீன கைப்பற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே அம்பாந்தோட்டை முறைமுகளம் 99 வருடங்கள் வரை சீனாவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுத்தின் ஒரு முனையம் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வடக்கிலுள்ள மூன்று தீவுகளை ஒப்படைப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு கடனுதவிகளை பெற்றுக் கொடுத்து , நாட்டின் வளங்களை கொள்ளையிட சீனா முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த தேசிய அமைப்புகள் தற்போது அமைதிகாத்து வருவதற்கான காரணம் என்ன? இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் இது தொடர்பில் தெளிவான தீர்மானத்தை எடுக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.