இலங்கையில் நீண்டகாலமாக காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் இதுவரை தேசிய பிரச்சனை தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் 1மில்லியனுக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதை பதிவு செய்ய விரும்புவதாக பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நிலையில் தாம் தாயகத்திற்கு திரும்புவதற்கான தமது உரிமையை வலியுறுத்த விரும்புவதாகவும் புலம்பெயர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே இலங்கையில் பல்லின மற்றும் பல மத சமூகங்களின் நீடித்த அமைதியையும் சகவாழ்வையும் கொண்டுவருவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வின் வடிவமைப்பிலும் தாம் பங்குதாரர்களாக இருப்பதாக புலம் பெயர் அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள தற்போதைய பிராந்திய உறுதியற்ற தன்மை காரணமாக சர்வதேச சமூகம் தலையிட்டு, தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வைக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கத்தின் அளப்பரிய ஆதரவுடன் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரனை மூலம் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அரசியல் பேச்சுவார்த்தைகள் பற்றிய சமீபத்திய உரையாடல்களை தாம் மேற்கொண்டுவருவதாகவும் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை அரசாங்கத்துடனான கடந்தகால நேரடி பேச்சுக்களின் பலனாக சிங்களத் தலைவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத பின்னணியில், எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிவடைவதற்கு சர்வதேச நடுவரோடு நடக்க வேண்டும் என்பதை தாம் உறுதியாகக் கூறுவதாக புலம்பெயர் அமைப்புக்கள் கூறுகின்றன.
ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களும் அனைத்து அரசியல், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார கருவிகளுடன் இத்தகைய ஈடுபாட்டை தீவிரமாக ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும் எனவும் இந்த அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
