இலங்கையில் தமிழர் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமைக்கான பொது வாக்கெடுப்பு முயற்சிக்கு பிரான்ஸ் அரசு ஆதரவு வழங்க வேண்டும்.
இவ்வாறு கோரும் தீர்மானம் ஒன்றை பாரிஸ் புறநகரான பொபினி நகரசபை வெளியிட்டிருக்கிறது.
11.02.2021 அன்று நடைபெற்ற சபையின் அமர்வில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று பொபினி நகரசபை 14.02.2021 அன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“தமிழ் ஈழப் பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மக்களது உரிமைகள் மீது திட்டமிட்டமுறையில் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளையும் மற்றும் அவர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்களையும் பொபினி நகரசபை வன்மையாகக் கண்டிக்கிறது” – என்று அந்தப் பத்திரிகை அறிக்கை தெரிவிக்கிறது.
‘சகலரது பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துகின்ற சர்வதேச சட்டங்களுக்கு ஊடாக இலங்கையில் தமிழர், சிங்களவர் உட்பட சகல இனங்களினது பாதுகாப்பும் அமைதியும் கௌரவமும் மீளப் பேணப்படுவதற்கு பொபினி நகரசபை தனது முழு ஆதரவை வெளிப்படுத்துகின்றது.’
“பொபினியில் வசிக்கின்ற-போரினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட- இலங்கைத் தமிழ் பூர்வீக மக்கள் தங்களது துயரங்களுக்கான அங்கீகாரத்தைக் கோருகின்றனர். அவர்களது விருப்பத்துக்கு ஆதரவாகவே நகரசபையின் இந்தத் தீர்மானம் வெளியிடப்படுகின்றது என்று நகர மேயர் அப்தெல் சாடி (Abdel Sadi) தெரிவித்துள்ளார்.”
-இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இல் – து-பிரான்ஸ் பிராந்தியத்தின் 93 ஆம் மாவட்டமான Seine-Saint-Denis இல் அமைந்துள்ள பொபினியில் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் சோசலிஸ வேட்பாளராகிய அப்தெல் சாடி (Abdel Sadi) பொபினி நகர மேயராகத் தெரிவானார்.
பாரிஸில் வாழும் சீக்கிய இன சமூகத்தைச் சேர்ந்த ரஞ்ஜித் சிங்(Ranjit Singh Goraya) என்பவரும் நகரசபை உறுப்பினராகத் தெரிவாகித் தற்சமயம் துணை மேயராக (Adjoint au Maire) உள்ளார். கடந்த வியாழனன்று நடந்த நகரசபை அமர்வில் தமிழ் அமைப்புகளது தரப்பிலான கோரிக்கையை சபையில் அவரே வாசித்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.