புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்ட யாழ்.நெடுந்துார பயணிகளுக்கான பேருந்து நிலையத்தில் பெயர்ப்பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுத்து பெயர்ப்பலகைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கி பெயர் பலகைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் அறிவுறுத்தலில் உள்ளூர் அச்சகம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகளை சீர்செய்ய சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்ட பலகை ஒன்று இன்று முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
அதனையடுத்து அனைத்து பலகைகளும் இன்று அகற்றப்பட்டு சீரமைத்து சில தினங்களுக்குள் மீளவும் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.