திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 ஈழத்தமிழர்கள், கூட்டாக உயிரை மாய்க்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி, மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், இலங்கையைச் சேர்ந்த 63 பேர் உள்ளிட்ட 93 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொய் வழக்கில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும், தண்டனைக் காலம் முடிந்த, வழக்குகளில் விடுதலை பெற்றவர்களை விடுவிக்க வேண்டும், சிறப்பு முகாமில் உள்ளவர்களை, குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும், எனக் கோரி, இவர்கள் கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து, 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், கடந்த வாரம், திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாகவும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், இன்று, சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள், அதிகளவு துாக்க மாத்திரைகளை சாப்பிட்டும், டிக்சன் என்பவர் கழுத்தையும், ரமணன் என்பவர் வயிற்று பகுதியையும் அறுத்துக் கொண்டும், உயிரை மாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று, பேச்சு நடத்தியதுடன், கடவுச்சீட்டு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள 22 பேரை, விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.