திருமணமான பெண்களுக்காக கடந்த 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் 63 நாடுகளை சேர்ந்த திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற சர்கம் கவுஷல் பங்கேற்றார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று முன்தினம் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய பெண் சர்கம் கவுஷல் முதலிடம் பெற்று பட்டத்தை வென்றார். தெற்கு பசிபிக் தீவு நாடான பாலினேஷியா சேர்ந்த பெண் 2-ம் இடத்தையும், கனடா பெண் 3-வது இடத்தையும் பெற்றனர்.
இதற்கு முன்பு கடந்த 2001-ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் அதிதி, திருமதி உலக அழகி பட்டத்தை வென்றார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் இந்த பட்டம் கிடைத்திருக்கிறது.
காஷ்மீரின் ஜம்மு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கவுஷலின் மகள் சர்கம் கவுஷல். கடந்த 2018-ம் ஆண்டில் கடற்படை அதிகாரி ஆதித்யாவை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு ஆசிரியையாகவும் பணியாற்றி உள்ளார்.