இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் சில பந்திகளின் மொழியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், மேற்கு ஐரோப்பிய குழுவைச் சேர்ந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முதலாம், இரண்டாம் நாள்களில் நடந்த முறைசாரா கலந்துரையாடல்களின் போதே, டென்மார்க், நோர்வே, சுவிஸ், நெதர்லாந்து, பிரான்ஸ், லிச்ஸ்ரென்ஸ்ரெய்ன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், தீர்மான வரைவின் வாசகங்களை இறுக்கமாக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான பரந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தீர்மான வரைவின் சில பந்திகளின் சொற்களை வலுப்படுத்துமாறு கோருவதில், இந்த நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தன என்றும், தெரிவிக்கப்படுகிறது.
குற்றங்களுக்கு காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடருமாறு அழைப்பு விடுக்கும், 14 ஆவது பத்தியில் ‘ஒப்படைத்தல்’ என்ற வார்த்தையைச் சேர்க்குமாறு, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என்றும், அதற்கு, சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும், கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த வரைவின் 5, 6 மற்றும் 7 ஆவது பந்திகளை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. நீதியை அடைவதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்துள்ளது என்ற 5 ஆவது செயற்பாட்டுப் பந்தியையும், மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்கள் பற்றிய ஆதாரங்களை ஒருங்கிணைத்து, பாதுகாக்க மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு அழைப்பு விடுக்கும் 6ஆவது செயற்பாட்டுப் பந்தியையும்,
மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வரும் போக்குகள் குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தும் வகையிலான, 7 ஆவது பந்தியையுமே அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
எனினும் வரைவின் முக்கியமான இந்தப் பந்திகளில், மாற்றங்கள் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஜெனிவா தகவல்கள் கூறுகின்றன.