சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதற்கான முழு செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
அந்த வகையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தியாவின் நன்கொடையுடன் யாழ்ப்பாணத்தில் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் இந்த நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் சீனாவின் பங்களிப்புடன் இங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருந்தது. இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்காக சீனாவின் காற்று மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடர்பான நிறுவனமான சினோர் இடக்வின் ( SINOR ITECHWIN) என்ற நிறுவனம் இந்த மின்சக்தி திட்டத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க விருந்தது, இதற்கான அனுமதியை அண்மையில் அமைச்சரவையும் வழங்கியிருந்தது.
எனினும் இது தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியதுடன் இதற்கு இந்தியா உதவி செய்வதற்கு முன் வந்தது. அத்துடன் வடக்கில் அரசியல் கட்சிகளும் இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்ததன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த வாரம் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணத்தின் இந்த நெடுந்தீவு அனலைதீவு போன்ற தீவுகள் இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு வேறு எந்தவொரு நாட்டினதும் அதிகாரிகளின் பிரசன்னம் இருப்பதை இந்தியா விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்தியா இது தொடர்பில் மிகவும் அக்கறை செலுத்தியது
அந்தவகையில் குறித்த சந்திப்பில் மின்சக்தி உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவசியத்தை அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார். அந்த வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கே இந்த திட்டத்தை இலங்கையே முன்னெடுக்க வேண்டும் என்றும் இதற்கான நிதி உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதன்படி 12 மில்லியன் டொலர் உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக மின்சக்தி அமைச்சரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார். அதன்படி இந்திய உயர்ஸ்தானிகரின் யோசனையை முழுமையாக ஏற்றுக் கொண்ட மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி அதற்கு அனுமதி கிடைக்கும் என்றும் அந்த வகையில் இந்தியாவின் நன்கொடையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கேசரிக்கு தகவல் தருகையில், யாழ்ப்பாண மக்களுக்கு போதுமான வகையில் குறைவின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பதே மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் எனது முழுமையான நோக்கமாக இருக்கின்றது. அதற்காக எந்த விதமான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். அந்த வகையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த யாழ்ப்பாணத்தின் அனலைதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காரணம் தற்போது இந்த தீவுகளுக்கு டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் செலவு கூடியதாகும். அதனால்தான் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எனினும் இந்தியா இது தொடர்பில் அக்கறை செலுத்தி இருக்கின்றது. என்னை அண்மையில் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த திட்டத்தை முன்னெடுக்க முழுமையான நிதி செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்தார்.
இந்தியா இந்த செலவை முழுமையாக நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகின்ற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவானது இலங்கையின் மூத்த அண்ணனாகும். எனவே இந்தியா கூறுகின்ற இந்த யோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இந்தியாவின் இந்த ஆலோசனையை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றோம்.
அதன்படி இந்தியா இவ்வாறு 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் பட்சத்தில் அந்த திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் நாங்கள் முன்னெடுப்போம் என்பதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றோம்.
மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் என்னைப்பொறுத்தவரையில் யாழ்ப்பாண மக்களுக்கு மின் விநியோகத்தை தடங்கலின்றி போதுமான வகையில் வழங்க வேண்டும் என்பதே நோக்கமாகும். அதற்காக நான் இந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றேன். எனக்கு யார் இதனை செய்வது என்பது முக்கியமாக இல்லை. அதனால்தான் நான் இவ்வாறு ஆரம்பித்தேன். ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியா உதவுகின்றது என்றால் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயமாகும். இந்தியா எமது நண்பன் என்ற வகையில் நாம் இதனை ஏற்றுக் கொள்கின்றோம். இந்தியா தெற்காசியாவின் ஆத்மாவாகவுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தை தற்போது இந்த புதிய வகையில் செய்வது தொடர்பில் நாங்கள் முழுமையாக கவனம் செலுத்தி இருக்கின்றோம் என்றார்.
இந்த திட்டத்தை சீனாவின் உதவியுடன் முன்னெடுத்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று வடக்கின் தமிழ் கட்சிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.