“யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற கடல் கடந்த தீவுகளான அனலைதீவு, நையினாதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளில் சுகாதாரப் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றன. அதற்கான தீர்வுகள் பல வருடங்களாகியும் தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.இதற்க்கு அரசாங்கம் விரைவில் ஒரு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
09/02/2021 அன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே சி.சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் உரையாற்றுகையில் “அனலைதீவில் வைத்தியர், பல்வைத்தியர், தாதியர் போன்ற பதவிநிலைகளுக்குரியவர்கள் பல ஆண்டுகளாக பணிக்கு அமர்த்தப்படாமல் இருக்கின்றனர். நெடுந்தீவு, எழுவைதீவு, நையினா தீவு போன்ற பிரதேசங்களிலும் இதுவே நிலைமை. அங்கு பயிற்சிக்காக வைத்தியர்கள் அனுப்பப்படுகின்றார்களே தவிர நிரந்தரமாக எவரும் பணியமர்த்தப்படவில்லை. அங்கு யாரும் செல்வதுமில்லை. அவ்வாறு பணியமர்த்தப்படுவதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபடுவதில்லை. வைத்தியர்களின் தேவை இந்தக் கடல்கடந்த தீவுகளுக்கு மிக அத்தியாவசியமானது. “
“அங்கு பணியாற்ற வைத்தியர்கள், தாதியர்கள் அமர்த்தப்பட்டால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் நான்கு ஐந்து பேருந்துகளில் மாற்றலாகி அதன் பின் கடல் வழிப்பயணத்தின் மூலம் தான் செல்ல முடிகின்றது. மேலும் அவர்கள் அங்கு இருந்து பணியாற்றினால் அவர்களுடைய சம்பளம் போதாமல் உள்ளது. ஆகவே அவர்களுக்கு ஏதேனும் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை வழங்க முடியுமா..?? ” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன் ” மாகாண சபைகளுக்கு கீழே குறித்த வைத்தியசாலைகள் இருந்தாலும் வைத்தியர்களை நியமிப்பதென்பது மத்திய அரசாங்கமே. அப்படியென்றால் முழுமையான அதிகாரத்தினை மாகாணசபைக்கு வழங்கியிருந்தால் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கமுடியும். மாறாக மத்திய அரசு முழுமையான அதிகாரத்தினை வைத்திருப்பதால் அரசாங்கம் அது தொடர்பில் சரியான பதிலை வழங்கவேண்டும்.” எனவும் தெரிவித்திருந்தார்