வடமாகாண சபைத்தேர்தலில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய பொதுப்பட்டியலொன்றைப் போடுவமா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஆலோசித்துள்ளார்.
வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியப்பரப்பில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்படுவதற்கான நிலைமைகள் அதிகமுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்கள் தனித்தனியாக களமிறங்குவதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.
இவ்வாறான நிலையானது, கூட்டணி ஆட்சிக்கே பெரும்பாலும் வித்திடும் என்றும் சில சமயங்களில் முத்தரப்பிடையே காணப்படும் முரண்பாட்டால் ஆட்சியில் பங்காளிகளாக இருக்கும் ஈ.பி.டி.பி. மற்றும் அங்கஜன் அணிக்கு கூட்டிணைந்தால் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் வழிவகுத்து விடும் ஆபத்தும் உள்ளதாக உணரப்படுகின்றது.
இந்நிலையில், கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்களும் ஒன்றிணைந்து கட்சிசார்பான அரசியல் செயற்பாட்டாளர்களைத் தவிர்த்து துறைசார் நிபுணர்களை களமிறக்குவது தொடர்பில் முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியையும் சுமந்திரனே முன்னெடுத்திருப்பதாகவும் இதன் முதற்கட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எனினும் அந்தப்பேச்சுவார்த்தை வெற்றியளித்ததா இல்லை அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளிப்படாத நிலையில் விரைவில் விக்னேஸ்வரன் தரப்புடனும் அதுதொடர்பான முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
இந்த முயற்சிகள் யாவும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.