தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
அறிமுகம் வீரரான நவ்மான் அலி 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் யாசிர் ஷா 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்ளையும் கைப்பற்றி நான்காம் நாளான இன்று தென் ஆபிரிக்காவை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.
வெற்றிக்கு தேவைப்பட்ட 88 ஓட்டங்களை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அஸார் அலி 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்த பவாத் அலாம் வெற்றி ஓட்டங்களைப் பவுண்ட்றி அடித்து பெற்றுக்கொடுத்தார்.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடப்பட்டுள்ள 27 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் ஈட்டிய ஐந்தாவது வெற்றி இதுவாகும்.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்களான இம்ரான் பட் (12), அபிட் அலி (10) ஆகிய இருவரையும் அன்ரிச் நோக்கியா ஆட்டமிழக்கச் செய்தார்.
எனினும் அஸார் அலி, அணித் தலைவராக முதலாவது போட்டியில் விளையாடிய பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3 ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, மொத்த எண்ணிக்கைக்கு ஓட்டம் சேராமலேயே 5ஆவது விக்கெட்டை இழந்தது.
தென் ஆபிரிக்காவின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 58 ஓட்டங்களுக்கு சரிந்தன. இன்றைய தினம் துடுப்பாட்டத்தில் டெம்பா பவுமா மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றார். ஜொர்ஜ் லிண்டே 11 ஓட்டங்ளைப் பெற்றார். போட்டியின் ஆட்டநாயகனாக பவாத் அலாம் தெரிவு செய்யப்பட்டார்.
பாகிஸ்தானுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் பெப்ரவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
படங்கள் – AFP