இந்தியாவின் மும்பையிலுள்ள கடலில் தீப்பிடித்த கப்பலிலிருந்து 3 பேரின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. மும்பை கடலில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. தளங்களுக்கு உணவு விநியோகம் செய்யும் பணியில் ஓ.எஸ்.வி. கிரேடர்சிப் ரோகினி என்ற கப்பல் ஈடுபட்டு வந்தது.
இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை காலை 9.15 மணியளவில் மும்பையில் இருந்து 92 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டு இருந்தது. 18 பேர் இருந்த இந்த கப்பலின் என்ஜின் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் சாம்ராட் ரோந்து படகு மற்றும் மீட்பு விமானத்தை அனுப்பினர். மீட்பு குழுவினர் தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து 14 பேரை பத்திரமாக மீட்டனர்.
மேலும் தீக்காயங்களுடன் கடலில் குதித்த மின்பொறியியல் அதிகாரி குர்பீந்தர் சிங் சிமா மீட்கப்பட்டு மும்பை மசினா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 78 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதற்கிடையே கப்பலில் எரிந்த தீ மாலை 4 மணியளவில் அணைக்கப்பட்டது. எனினும் புகை மற்றும் வெப்பம் காரணமாக உடனடியாக கப்பலில் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை. பின்னர் கப்பலுக்குள் சென்ற கடலோர காவல் படையினர், பிட்டர் அக்சய் நிகம் (வயது25), ஆயிலர் ரஞ்சித் (49) ஆகியோரின் உடல்களை கப்பலின் டெக் பகுதியிலும் இருந்தும், என்ஜினீயர் அங்கித் ஆண்டனியின் (31) உடலை என்ஜின் அறையில் இருந்தும் மீட்டனர்.
3 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில் இருந்தன. அந்த உடல் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு டி.என்.ஏ. சோதனை செய்யப்பட உள்ளது.
நன்றி :மாலைமலர்