நாட்டின் சகல பாடசாலைகளிலும் உள்ள அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படவிருப்பதாக நேற்று (09.02.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண மற்றும் தனிமைப்பபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர, நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் தற்சமயம் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ,கொழும்பிலுள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்தின் 412 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதில் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என மாவட்ட அபிவிருத்திக் குழு பரிந்துரைத்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் 80 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க முடியாத நிலை காணப்படுகிறது. அடுத்த மாதம் முதலாம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின் கீழ், நாடளாவிய ரீதியாக உள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படும்.