இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்களாகவே உள்ளனர். இதில் ஒரு தமிழர்கூட இல்லை. எனவே இதுவும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலைதான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10/02/2021 அன்று இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சின் மாணிக்கக்கல் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 47 பேரில் 17 பேர் தமிழ் பேசுவோர் இருந்தனர்.
அதிலும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றவர்களாக தமிழர்களே இருந்தனர். தற்போதைய அரசின் ஆட்சியில் நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்கள். ஒரு தமிழர்கூட இதில் இல்லை என்பதனை தமிழர்களினால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள மமுடியும்?
2020 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சை (எஸ்.எல்.ஏ.எஸ்) நடத்தப்பட்டது. இப்பரீட்சையின் முடிவு ஒரு வருட தாமதத்தின் பின்னர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தபரீட்சையில் 69 பேர் சித்தி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தெரிவாகியுள்ளனர் .இவர்கள் 69 பேரும் சிங்களவர்கள்.ஒரு தமிழ் பேசுபவர்கூட சித்திபெறவில்லை.
இது திட்டமிட்ட இன அழிப்பாகவே நாம் கருதுகிறோம். கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தி பெற்று விட்டார்கள் என்பதற்காக அந்தபரீட்சையையே நிறுத்திய நாட்டிலும் ஆட்சியிலும்தான் தமிழர்களாகிய நாம் வாழ்கின்றோம் என்றார்.