சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் 21/01/2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுடைய தொடர் நடவடிக்கையாக காணி நிலம் அபகரிப்பு அதே போர்வையிலே இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சிகள். தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.
இதற்கு எங்களுடைய தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை, திருகோணமலை மாவட்டத்தில் கண்ணியா வெண்ணீர் ஊற்று பிரச்சினை அதேபோன்று திருகோணமலையில் எல்லைக் கிராமமாகிய தெண்ணைமரவாடியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பிரச்சினைகள் அதேபோன்று வவுனியா, மன்னார் மாவட்டத்திலே பல பிரச்சினைகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.