வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்ந்த இரண்டு டசின் உயிரிழப்புகள் தொடர்பாகத் தாங்கள் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர் என்று நோர்வேயின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
75,80 வயதுகள் தாண்டிய மூதாளர்கள் 23 பேர் பைசர் – பயோஎன்ரெக் தடுப்பூசி ஏற்றப்பட்ட ஓரிரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். அவர்களில்13 பேரது மரணங்கள் மூதாளர் பராமரிப்பகங்களில் பதிவாகியிருக்கின்றன. பிரேத பரிசோதனைகளின் போது தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகள் மரணத்துக்குப் பங்களித்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதாக நோர்வேயின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“தடுப்பூசியின் காய்ச்சல், குமட்டல் போன்ற சாதாரண பக்க விளைவுகள் கூட பலவீனமான முதுமை நோயாளிகளில் உயிராபத்தை உண்டுபண்ணிவிடலாம்” என்று நோர்வே மருந்துகள் அமைப்பின் (Norwegian Medicines Agency) தலைமை மருத்துவ அதிகாரி சிகர்ட் ஹார்டெமோ (Dr. Sigurd Hortemo) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்கள் குறித்து தாங்கள் பதற்றப்படவில்லை என்று கூறியிருக்கின்ற சுகாதார நிபுணர்கள், மிகவும் பலவீனமான – நோய்ப் பாதிப்புகளுக்கு இலக்கான – மிகச் சிலரில் தடுப்பூசிகள் இத்தகைய உயிராபத்துகளை உண்டாக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதனை அடுத்து அங்கு மூதாளர்க ளுக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நோர்வே உயிரிழப்புகள் தொடர்பான சகல தரவுகளையும் அந்நாட்டு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு வருவதாக பைசர் – பயோஎன்ரெக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் கடந்த மாதம் முதல் சுமார் 30 ஆயிரம் பேர் வைரஸ் தடுப்பூசியின் முதல் சொட்டைப் பெற்றுள்ளனர். அவர்களில் 21 பெண்களும் எட்டு ஆண்களும் பக்க விளைவுகளுக்கு உள்ளாகினர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரான்ஸ் உட்பட பல ஜரோப்பிய நாடுகளில் வயோதிபர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப் பட்டுவருகிறது. எனினும் தடுப்பூசியுடன் தொடர்புபட்ட மரணங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகிய செய்தி தற்போது நோர்வேயிலேயே முதலில் வெளியாகி உள்ளது.