கற்பிட்டி பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலமாக கனடாவுக்குச் செல்வதற்காகக் காத்திருந்த 24 இலங்கையர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஷேட நடவடிக்கை ஒன்றின் மூலம் கல்பிட்டி பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கற்பிட்டி கடலேரிப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனையடுத்து லொறி சாரதி உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். கடல்மார்க்கமாக கனடாவுக்குச் செல்வதற்காக இவர்கள் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 20 ஆண்கள், இருவர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆண் குழந்தை ஒன்றும் இவர்களுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.
கைதானவர்களில் ஒன்பது பேர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். ஆறு பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஐந்து பேர் முல்லைத்தீவையும், மூவர் திருமலையையும் சேர்ந்தவர்களாவர். லொறிச் சாரதி புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.