தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, அசாம், ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது.
சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் உரையில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பட்ஜெட் உரையின் போது தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்தார்.
மதுரை-கொல்லம் சாலை மற்றும் சித்தூர்-தாட்சூர் சாலை ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
சென்னையில் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ 2வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் பெட்டுகாட் ஆகிய 5 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.
மும்பை-கன்னியாகுமரி நடைபாதையின் 600 கி.மீ உள்பட ரூ .65,000 கோடி முதலீட்டில் கேரள மாநிலத்தில் 1100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகளை அறிவித்தார். மேற்கு வங்காள மாநிலத்தில் ரூ .25,000 கோடி செலவில் கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்படுத்துதல் உட்பட 6700 கி.மீ நெடுஞ்சாலை பணிகளை அறிவித்தார்.
அசாம் மாநிலத்தில் தற்போது ரூ .19000 கோடியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக சீதாராமன் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சமாநிலத்தில் 1300 கி.மீ க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய ரூ .34,000 கோடி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
வேளாண், கல்வி, மின், துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
விவசாயம்
* புதிய வேளாண் கடன்களுக்காக ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
* வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய அரசு திட்டம்.
* சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்.
கல்வி
* டிஜிட்டல் பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.
* அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.
* தனியார் பங்களிப்புடன், 100 சைனிக் பள்ளிகள், ஆரம்பிக்கப்படும்.
* லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
* பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும்.
* பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவி தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.
மின்சாரம்
* கடந்த 6 ஆண்டுகளில் மின் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
* மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது.
துறைமுகம்
* ரூ.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* சென்னை உள்ளிட்ட 5 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
நன்றி – தினத்தந்தி