பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை அம்பாறை பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே பொலிஸார் நீதிமன்றத் தடையுடன் வந்தனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்துக்கே நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இன்று பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் வரும் 6ஆம் திகதி பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டது.