நாடு திரும்பிய பஸில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரும் அதன் உறுப்பினர் ஒருவரும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது நளின் பண்டார எம்.பி மேலும் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினோம். அதில் தெளிவாக ஆணைக்குழுக்களின் சுயாதீனத்துவம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸில் ராஜபக்ஷவை வரவேற்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்ரா பெர்னாண்டோ,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்.பி.பெரேரா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள்.
இதனால் தேசிய பொலிஸ’ ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவரையும், உறுப்பினரையும் ஆணைக்குழுவில் இருந்து வெளியேற்றுங்கள். இதனால் அரசியலமைப்பை நிறைவேற்றியும் எந்தப் பலனும் இல்லை.
அன்று காக்கை வெளியே போக முயன்ற போது விமான நிலையத்தில் இருந்தவர்களே பிடித்தனர். இந்த காக்கையை வரவேற்க ஆணைக்குழுவின் தலைவர் போகின்றார். அதேபோன்று வெட்கமின்றி வரவேற்க அங்கே சென்றவர்கள் இந்த இடத்திலும் இருக்கின்றனர் என்றார்.