வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லீம் மகாவித்தியால மாணவர்களும் பெற்றோர்களும் இன்றையதினம் காலை பாடசாலைக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர் யாழ்பாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக மாகாண கல்வித்திணைக்களத்தால் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு இன்று அவர் கடமைகளை பொறுப்பேற்கவிருந்த நிலையில் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தபோது,
தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் எமது பாடசாலையில் ஏற்கனவே அதிபராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன் படாசாலையில் பல்வேறு முறைக்கேடான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது. எனவே இந்த அதிபரை மீண்டும் எமது பாடசாலைக்கு நியமித்து பாடசாலையின் அபிவிருத்தியில் வீழ்சியை ஏற்படுத்தவேண்டாம். எனவே இவருக்கு பதிலாக வேறு ஒரு அதிபரை நியமிக்குமாறு தெரிவித்தனர்.
எமது பாடசாலை பணிஸ்மன்ட் இடமாற்றத்திற்கான புகலிடமா, யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார்? என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாடசாலையின் பிரதான வாயிலை மூடி எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்வி அதிகாரி, பொலிஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
பாடசாலை வாயில் திறக்கப்பட்டு ஆர்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் பிரகாரம் அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கல்வி செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியது.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த வலயக்கல்வி பணிப்பாளர், கிராமமக்கள் மற்றும் பெற்றோர்களது கோரிக்கைக்கமைய இந்த அதிபருக்கு பதிலாக வேறு ஒரு அதிபரை இப்பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக அவர்களிற்கு தெரிவித்துள்ளோம் என்றார்.