மொரட்டுவ – கல்தேமுல்ல பகுதியில் பாதாள குழு உறுப்பினரான ‘அங்குலானே மத்தா’ என்றழைக்கப்படும் மதுஷங்க சில்வா என்பவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கல்கிஸ்ஸ பொலிஸாருக்க கிடைக்கப் பெற்றதகவலுக்கமைய கல்தேமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக கூறப்படும் 22 வயதுடைய ‘அங்குலானே மத்தா’ என்றழைக்கப்படும் மதுஷங்க சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தற்போது துபாயில் தலைமறைவாகவுள்ள பாதாளகுழு உறுப்பினரான அஞ்சு எனப்படும் நபரின் உதவியாளராகவும் சந்தேக நபர் செயற்பட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, அங்குலானை பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடனும் சந்தேக நபர் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கல்கிஸ்ஸ – மொறட்டுமுல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்கு அண்மையில் துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதுவும் அஞ்சுவின் ஆலோசனையின்பேரில் , சந்தேக நபரான அங்குலானே மத்தாவே செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.