இலங்கை ஆயுதப்படைகளின் ஆளுமை வளர்ச்சி உட்பட ஒட்டுமொத்த ஆளுமை விருத்தியினை நோக்கி ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் முகமாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அலுவலர்கள் கல்லூரியைச் சேர்ந்த இலங்கை ஆயுத படைகளின் பிரதிநிதிகள் குழுவொன்றுக்கு இந்தியாவுக்கான சர்வதேச கூட்டிணைவு விஜயம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
39 அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த குழு புதுடில்லியில் உள்ள முப்படை தலைமையகங்கள் அவற்றின் செயற்பாடுகளை அறிந்துகொள்வது மாத்திரமன்றி முப்படைகளின் கள ரீதியான செயற்பாடுகளை பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த விஜயத்தின்போது ஆயுதப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடனான பல்வேறு சந்திப்புக்கள் கைத்தொழில் மற்றும் கலாசார நிலையங்களுக்கான விஜயங்கள் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கான இந்த விஜயமானது கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது கருத்துதெரிவித்த பிரதி உயர் ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தொப்புள் கொடி உறவானது பௌத்தம் மற்றும் மக்களிடையேயான உறவுகளால் மேலும் வலுப்படுத்தப் பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த விஜயமானது இச்சந்தர்ப்பத்தில் மிகப்பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் அதேவேளை இலங்கை ஆயுதப் படைகளின் இதயங்களுடனும் மனங்களுடனும் செயற்திறன் மிக்க வகையில் இணைத்து கொள்வதற்கான கருப்பொருளாகவும் அமைகின்றது. பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் உத்தியோகத்தர்கள் கல்லூரியின் பிரதி கட்டளையதிகாரியான லெப்டினன்ட் கேணல் லலித் ஹேரத் இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்தபோது, இந்த விஜயத்துக்காக இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியாவின் கலாசாரம் தொழில்நுட்ப வல்லமை மற்றும் இந்திய ஆயுத படைகளின் உயர்வான கட்டமைப்பு ஆகியவை தொடர்பாக இலங்கை பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் சிறந்த புரிதலை பெற்றுக்கொள்வதற்கு இந்த விஜயம் ஆதரவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விஜயமானது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பில் உற்பத்தித்துறை சார்ந்த நிபுணத்துவம் மீதான மேலதிக கவனத்துடன் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையினை நிரூபிக்கும் அதேவேளை இரு நாடுகளினதும் ஆயுத படைகளின் நட்புறவினையும் தோழமையினையும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிகவும் ஆழமானதும் வலுவானதுமான தொழில் ரீதியான தொடர்புகளை கொண்டிருக்கும் இருநாடுகளினதும் ஆயுதப்படைகளின் நீடித்த மற்றும் தனிப்பட்ட நட்புறவின் பிணைப்பினை மேலும் விருத்தி செய்வதற்கான பொருத்தமான களத்தினை இந்த விஜயம் வழங்குகின்றது.