“பாரிய பட்டு கண்காட்சியும் கொள்வனவாளர் விற்பனையாளர் சந்திப்பும்” கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் 2022 ஜனவரி 06 ஆம் திகதி நடைபெற்றது.
இந்திய பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையானது (ISEPC), கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து 2022 ஜனவரி 6ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டு உற்பத்திப் பொருட்கள் மற்றும் பட்டுடன் சார்ந்திருக்கும் தயாரிப்புக்களை காட்சிப்படுத்தும் பாரிய பட்டுக்கண்காட்சி மற்றும் கொள்வனவாளர் விற்பனையாளர் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கண்காட்சியானது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான பட்டு கொள்வனவாளர்களுடன் முப்பதுக்கும் அதிகமான இந்திய பட்டு ஏற்றுமதியாளர்கள் இந்நிகழ்வில் சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். பட்டுத்துணி மற்றும் பட்டு நூல்; சாறிகள்; நவீனரக உயர் தயாரிப்புகள்; வீட்டை அழகு படுத்தும் பொருட்கள்; தரை விரிப்புக்கள்; சுவர்களில் தொங்கவிடப்படும் அலங்காரப் பொருட்கள்; பற்றிக் ரக ஓவியங்கள் (பட்டு); பட்டு கலந்த சணல் மற்றும் கம்பளி உற்பத்திப் பொருட்கள் போன்றவை; வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிசார் நெசவுப்பொருட்கள்; உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த GI தயாரிப்புக்கள் ஆகியவை உள்ளிட்ட பலவகை பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு பி.எல்.ஏ.ஜே.தர்மகீர்த்தி அவர்களும் இந்த கண்காட்சிக்கு விஜயம் செய்திருந்தார்.
நாட்டின் பாரம்பரியத்திற்கு நவீன பரிமாணங்களைச் சேர்க்கின்ற கண்டுபிடிப்புக்களை வழங்கிய கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் இளம் பட்டு வியாபாரிகள் உள்ளிட்ட இந்தியாவின் தொழில்முனைவோரின் விபரங்கள் இந்த நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டது. அவர்களின் புத்தாக்கங்களால் இந்திய பட்டுப் பொருட்கள் உலகில் அதிக போட்டித்தன்மையை உருவாக்குகின்றன.
இலங்கையைச் சேர்ந்த விற்பனையாளர்களுடன் உரையாடிய உயர் ஸ்தானிகர் அவர்கள், தொழில்நுட்பம் மற்றும் திறன்கள் ஆகியவற்றுக்கான நீண்டகால பங்குடமையுடன் கூடிய வாய்ப்புக்களை ஆராயுமாறு இந்த கண்காட்சியை ஒழுங்கமைத்தவர்கள் மற்றும் அதில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தியிருந்தார். எமது பொதுவான பாரம்பரியம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையிலுள்ள திறமையான இளைஞர் சமூகம் நன்மைகளை பெற்றுக்கொள்ளமுடியும், என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்நிகழ்வின் பக்க நிகழ்வாக பட்டு துணிகள் மற்றும் பட்டு சார்ந்த தயாரிப்புக்களில் பொருளாதார ஒத்துழைப்பு, சந்தை நுண்ணறிவு, தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், தர நிர்ணயங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை தொடர்பில் தகவல்களை பரிமாறுதல், மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் இந்திய பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு சபை மற்றும் இலங்கையின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையிலான ஆடை துறைகளில் மிகவும் நெருக்கமான தொடர்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்குமென உயர் ஸ்தானிகர் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
உலகளவில் இரண்டாவது பட்டு உற்பத்தி நாடு என்ற அந்தஸ்தினை இந்தியா கொண்டுள்ளது. அத்துடன் வர்த்தகத்துக்கான சிறப்பான பட்டு வகைகளான மல்பெர்ரி, டஸ்ஸார், எர்ரி, மூகா ஆகிய இந்தியாவில் மாத்திரம் தயாரிக்கப்படும் தனித்துவமிக்க உற்பத்திகளை இந்தியா கொண்டுள்ளது. 2021 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 200.45 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பட்டு மற்றும் பட்டு சார்ந்த உற்பத்தி பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இப்பெறுமதியானது குறித்த காலப்பகுதியில் 2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்றுமதி பெறுமதியை (US$ 123.74) காட்டிலும் 61.99% அதிகமானதாகும். தயாரிக்கப்பட்ட பட்டு உடைகள் இதில் அதிக பங்கினைக் கொண்டுள்ளன. ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையான காலத்தில் 2021 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் முறையே US$ 80.45 மில்லியன் மற்றும் US$ 43.00 மில்லியன் பெறுமதியை அவை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.