பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம், பணம் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருள்களை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பிரான்ஸின் சில ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. கைதானவர் இலங்கைத் தமிழரா அல்லது இந்தியத் தமிழரா என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. பாரிஸ் ஊடகங்கள் அவரை ஓர் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட் ஷடிருக்கின்றன. சில சுயாதீன வட்டாரங்கள் அவர் ஒர் இந்தியத் தமிழர் என்று கூறியுள்ளன.
புகைப்படத் தொழில் நிலையம் ஒன்றின் உள்ளேயே மறைவிடத்தில் தங்க நாணயங்கள், ஆபரணங்கள், வைரக்கற்கள், கடிகாரங்கள் மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஈரோக்கள் பணம் என்பன ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை பொலீஸார் கண்டுபிடித்தனர் என்று கூறப்படுகிறது. தங்கத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அந்த நிலையத்தின் உரிமையாளரான 55 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னரும் அதே நபருடைய மற்றொரு வர்த்தக நிலையம் ஒன்றின் கீழ் தளத்தில் இருந்து புடைவைகள் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருந்தன என்றும் கூறுகின்றன.
கைது செய்யப்பட்டவர் நிதி ஆய்வு மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய படைப்பிரிவினரால் (Financial Research and Investigations Brigade) விசாரிக்கப்பட்டு வருகிறார்.