உலகெங்கிலும் தமிழர்கள் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை மாசி 4ஆம் திகதி அன்று புறக்கணித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டையும்இ சிறிலங்காவின் தொடர்ச்சியான தமிழ் இனஅழிப்பை நிறுத்துவதற்காக தடைகளையும் கொண்டு வரக் கோரி மாசி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெறும் அமைதிவழிப் பேரணிக்கு உலகத் தமிழர்களின் பேராதரவு புலம்பெயர் தேசத்தின் பத்து அமைப்புக்கள் கூட்டிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய தமிழ் பேரவை, ஐரிஸ் தமிழ் பேரவை, அனைத்துலகஈழத்தமிழர் மக்களவைந, கனடிய தமிழ்த் தேசிய அவை, பசுமைத்தாயகம், யு.எஸ்.டாக், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உள்ளிட்ட அமைப்புக்களே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா வாழ் தமிழ் பேசும் மக்கள் தமக்கு எதிராக சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை மாசி மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடாத்துகின்றார்கள். இவ் அமைதிவழிப் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் பொது அமைப்புக்களால் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் வடகிழக்கு மாகாணங்களின் நகரங்களான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படுகின்றது.
இவ் அமைதியான ஆர்ப்பாட்ட ஊர்வலமானது சிறிலங்காவின் சுதந்திர தினமான மாசி மாதம் 4ஆம் திகதியை ஒரு கரிநாளாக கடைப்பிடித்து வருகின்றார்கள். சிறிலங்கா 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைஇ தமிழர்களின் அடையாளங்களை அழித்தல் மற்றும் மறுக்கப்படும் தனிமனித சுதந்திரம் அரசியல் சுதந்திரம், பாதுகாப்பு, சமத்துவம், நீதி ஆகிய காரணங்களினால் சிறிலங்காவின் சுதந்திர நாளை தமிழ் பேசும் மக்கள் ஓரு கரிநாளாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்.
மேலும் இவ் அமைதியான ஆர்ப்பாட்ட ஊர்வலமானது சிறிலங்கா அரசால் நடாத்தப்பட்ட மாபாதக குற்றங்களுக்கு எதிரான நீதி வழங்குவதில் தாமதம் தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக வைத்திருத்தல் மற்றும் மக்களுக்கான நிர்வாக சேவைகளில் இராணுவத் தலையீடு, அரசியல் கைதிகளை காலவரையறை இன்றி சிறையில் வைத்திருத்தல், தொல்லியல் ஆராட்சி என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு, புத்த சமயத்தவர் வசிக்காத தமிழர் பகுதிகளில் புத்த சின்னங்களை அமைத்தல் தமிழர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துதல், தமிழர் பாரம்பரிய நில உரிமைகளை மறுப்பதோடு கால்நடைகளின் மேய்ச்சல் நில உரிமை மறுத்தல், பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மேல் அதிகரிக்கப்பட்டுள்ள மிரட்டல்களும் கண்காணிப்புக்களும், கொவிட்-19 இனைக் காரணம் கூறி இஸ்லாமிய மற்றும் கிறீஸ்தவ இறுதிச் சடங்கு உரிமைகளை மறுத்தல் மற்றும் போரில் இறந்த உறவுகளுக்கான நினைவு அஞ்சலி செலுத்துவதை மறுத்தல் போன்ற விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக நடைபெறுகின்றது.
சிறிலங்கா அரசானது தொடர்ந்தும் சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கும் வழங்கிய உறுதிமொழிகளை மதிக்காமல் நடப்பதுடன் பிற மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதே போல் சர்வதேச சமூகமும் பொருளாதார தடை போன்ற காத்திரமான பொறிமுறைகளை பாவித்து சிறிலங்கா அரசை அது வழங்கிய உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்த வைக்காது பின்னிற்கின்றது. (இது குறித்த வெளியீட்டினை பெற இங்கே அழுத்துக.)
அதேநேரம் நாடுகள் உலகளாவிய நியாயாதிக்க சட்டங்களை (Universal jurisdiction) பாவித்து இக்குற்றங்களை இழைத்த தனிநபர்கள் மீது சர்வதேச பயணத் தடை, சொத்து முடக்கம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இக்குற்றங்கள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அமெரிக்காவிலுள்ள மக்னிட்ஸ்கி சட்டம் (Magnitsky Act) மற்றும் அதன் சட்ட வரைபினை ஒத்த சட்டங்களைக் கொண்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட OISL அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட நபர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் போர்க்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பில் ஈடுபட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கு இவ்வாறான பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்க வேண்டும்.
இந்த வகையில் தமிழ் மக்களாகிய நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் உயர் ஸ்தானிகரால் தை 2021இல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய தீர்மானங்களை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியது, சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு போன்றவற்றை விசாரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைத்து சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அல்லது சிறிலங்காவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (adhoc International Criminal Tribunal for Sri Lanka) ஒன்றினை உருவாக்கல் போன்றவற்றை வரவேற்கின்றோம்.
ஐ நா மனித உரிமைக் கழக உயர் ஸ்தானிகரின் பரிந்துரையின் அடிப்படையில் மார்ச் 2021 மனித உரிமைகள் கழகத்தின் 46ஆவது அமர்வில் புதிய தீர்மானத்தை நிறைவேற்றுமாறு 47 உறுப்பு நாடுகளையும் தாயகத்து தமிழ் பேசும் மக்களும் புலம்பெயர் தமிழ் பேசும் மக்களும் வேண்டுகின்றோம்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் கண்டறிவதில் சர்வதேச சமூகம் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இனப் பிரச்சினையிற்கு நிலையான அரசியல் தீர்வை காண இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள பாரம்பரிய தாயகத்தில் தமிழர்கள் ஒரு தேசிய இனம், தலையீடற்ற தன்னாட்சி எனும் அடிப்படையில் ஓர் தீர்வை எட்ட உதவுமாறு நாம் சர்வதேச சமூகத்திடமும் ஓர் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
இப்படிப்பட்ட தீர்வானது வன்முறை சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் தவிர்ப்பது மட்டுமல்லாது தமிழர்களின் பாதுகாப்பு, சுயாதீனமாக முடிவெடுக்கும் அரசியல் உரிமைகள் சமூக பொருளாதார மற்றும் கலாசார நலன்களை பாதுகாப்பதோடு நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும்.