பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (05.02.2021) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பேரணி வரும் வீதிகளில் ஆணிகளை வைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை தடுத்து நிறுத்தும் மிக மோசமான முயற்சிகள் இன்று இடம்பெற்றுள்ளது என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
“இதனை யார் செய்தார்களோ தெரியாது. நாங்கள் உங்களை அடிக்க வரவில்லை. குழப்பம் செய்ய வரவில்லை. நியாயம் கேட்டே செல்கிறோம்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அவர்களுடைய வாகன கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோல் நிரப்பப்பட்ட போத்தல்கள் கையில் வைத்திருந்தனர் என்றும் எமது ஊடகப்பிரிவிற்கு அனந்தி சசிதரன் தெரிவித்தார்.