பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலாக எதிர்வரும் 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டதை நிறுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தற்போதைய சமகால தொற்று நோய் நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் தடை உத்தரவு வழங்கவேண்டும் என்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் தடை உத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் களுவாஞ்சிக் குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்துவதற்கோ அல்லது துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவோ முடியாது என நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் பெயர் குறிப்பிடப்பட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தொடர்பில் சாரணக்கியன் தெரிவிக்கையில்,
நீதின்றத்தினால் எனக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடை செய்யுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸினால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த நிகழ்வில் நான் பங்குபெறுவதை தடுப்பதற்கு கொரோனா காலப்பகுதியினை காரணம் காட்டி; சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், சமூக இடைவெளியினை பேணாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படக் கூடாது எனக் கூறி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.
கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்கப்படவில்லை. ஏனென்றால் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம். கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அத்துடன் கொரோனா அதிகமாக இருந்த காலப்பகுதியில் கூட இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அமைச்சர்கள் பதவிப்பிரமானம் செய்து கொண்டதற்கு நடைபவணி மேற்கொண்டமைக்கு தடை உத்தரவு விதிக்கப்படவில்லை.
ஒரு ஜனநாயக விரோதமான அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயம். இது நான் எதிர்பார்த்த ஒரு விடயம் தான். எனக்கு பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன. நான் நினைகின்றேன் கடந்த ஒரு ஆறுமாத காலமாக 10 இற்கும் மேற்பட்ட தடை உத்தரவுகள் எனக்கு கிடைத்துள்ளன. தடை உத்தரவுகள் கிடைப்பது தற்போது மதியம் உணவருந்துவது போல ஒரு இயல்பான விடயமாக எனக்கு மாறியுள்ளது.
இதில் குறிப்பாக ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு இனங்களுக்களுக்கெதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளை தூண்டும் விதமாக நாங்கள் செயற்படுவோம் எனக்கூறி இந்த தடை உத்தரவினை எடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அப்படியாக இருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதை தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து வருகின்றனர்.
இந்த அரசாங்கம், இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கெதிரான பிரச்சனைகளை தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை. இந்த போராட்டம் கூட அமைதியான போராட்டம். 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை நான் கூறிக் கொள்கின்றேன். – என்றார்.