பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி தனது நான்காவது நாளான 06/02/2021 அன்று மன்னாரில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.
முன்னதாக நான்காம் நாள் காலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த பேரணி, மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக கொறவப்பொத்தானை வீதியை அடைந்து பண்டாரவன்னியன் சிலையடியில் போராட்டம் இடம்பெற்றது.
இதற்கிடையில், வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்தத இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் பேரணியுடன் இணைந்து பண்டாரவன்னியன் சிலை வளாகம் வரை சென்றிருந்தனர்.
இதன்பின்னர், மத குருக்களால் பண்டாரவன்னியன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரணி, நெளுக்குளம் சென்று அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து மன்னார் நோக்கி பேரணி செல்கின்றது.
இந்தப் பேரணியில், சிவில் சமூக அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சி.ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செ.கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சீனிதம்பி யோகேஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியூதீன், செ.மயூரன், ப.சத்தியலிங்கம், மற்றும் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, மன்னார் நோக்கிப் பயணித்த பேரணி, நண்பகல் 12 மணியளவில் மன்னார் மடுச் சந்தியை அடைந்தது. அதன்பின்னர் அங்கிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நகர் நோக்கிச் சென்றது.
இதன்போது, பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகரைச் சென்றடைந்தது.
மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையினையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.
அத்துடன், பேரணியாக வந்த மோட்டார் சைக்கள் மற்றும் வாகனங்களின் இலங்கங்களையும் பொலிஸார் பதிவுசெய்த பின்னர் மன்னார் நகரப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். மன்னார், பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த பேரணி சென்றது.
குறித்த பேரணியில், சர்வமதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதுடன் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகளும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர். இந்நிலையில், குறித்த பேரணி மன்னார் நகரில் இருந்து மன்னார்-யாழ். பிரதான வீதியூடாக வெள்ளாங்குளம் நோக்கிச் சென்றது.
வெள்ளாங்குளத்திலிருந்து முழங்காவில் பகுதிகளின் ஊடாக கல்விளான் பகுதிக்குப் பேரணி சென்றுஇ அங்கு மதிய உணவு ஏற்பாட்டினைத் தொடர்ந்து தற்போது மல்லாவியைச் சென்றடைந்து அங்கிருந்து மாங்குளம் வழியாக முறிகண்டியை அடைந்தது. பின்னர் அங்கிருந்து இரணைமடுவை வந்தடைந்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாலையில் நிறைவடைந்தது.