பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா 03/02/2021அன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்ற நியாதிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் குறித்த பேரணி உள்நுழைவது மற்றும் எதிர்வரும் சுதந்திர தினத்தில் இன ஒன்றுமையைக் குழப்புகின்ற வகையிலான போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் 14 நபர்களுக்கு எதிராகத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவானது இன்று மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுத் தொல்லை மற்றும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கட்டளை கோரப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மாநகர முதல்வர் வி.மணிவன்னன், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.