“போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்படாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அது ஒரு வெளியக விசாரணையாகத்தான் இருக்க வேண்டும்” என நோர்வேயின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ஹம்சி குணரட்ணம் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஊடகவியலாளர்களுடன் நேற்று(26/09) இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பிலேயே இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ மாநகர சபையின் பிரதி மேயராகவும் பதவிவகிக்கும் ஹம்சி குணரட்ணம், கடந்த வாரம் இடம்பெற்ற நோர்வே பொதுத் தேர்தலில் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
இலங்கையையைப் பூர்வீகமாகக்கொண்ட ஹம்சி குணரட்ணம், 1991 ஆம் ஆண்டில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு குடிபெயர்ந்தவர். நோர்வேயில் முழுநேர அரசியல்வாதியாக உள்ள அவர், ஒஸ்லோ மாநகரசபையின் பிரதி மேயராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வு வேண்டும் என்பதை இலங்கை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளியில் நின்றுகொண்டு அதனை நான் சொல்ல முடியாது. என்னுடைய இதயத்தில் இலங்கைக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஒரு இடமிருக்கும். நான் இப்போது நோர்வேஜியப் பிரஜையாக இருந்தாலும், இலங்கையிலிருந்து வந்தவள் என்ற முறையில் அந்த இடம் இருக்கும்” எனவும் தெரிவித்த அவர், “சமாதான முயற்சி ஒன்றில் நோர்வே எதிர்காலத்தில் ஈடுபடுமா?” என்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, “எதிர்காலத்தில் வெளிவிவகாரக் கொள்கையின் மூலமாகவே இதனைத் தீர்மானிக்க முடியும்” எனவும் தெரிவித்தார்.
“உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும். அதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு உறவுகளை நோர்வே அரசாங்கம் வலுப்படுத்த வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.