மக்கள் வசிக்காத சிறிய தீவொன்றில் நிர்க்கதியான நிலையிலிருந்த 3 பேரை 33 நாட்களின் பின் அமெரிக்க விமானப்படையினர் மீட்டுள்ளனர். கியூபாவைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை அமெரிக்காவின் புளோரிடா கீஸ் தீவுக்கூட்டங்களுக்கும் கியூபாவுக்கும் இடையிலுள்ள அன்குய்லா கே தீவில் கடந்த செவ்வாய்கிழமை (096.02.2021) அன்று மீட்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் தேங்காய்களை உட்கொண்டு தாம் உயிர்பிழைத்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு கொடி போன்று அசைத்ததன் மூலம், அமெரிக்க விமானமொன்றின் உத்தியோகத்தர்களின் கவனத்தை ஈர்த்ததையடுத்து இவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
அமெரிக்க விமானப்படை அதிகாரி ரிலே பீச்சர் இது தொடர்பாக கூறுகையில்,
கடந்த திங்கட்கிழமை தான் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஏதோ தனது கண்களை ஈர்த்ததாகவும் மீண்டும் தாழ்வான உயரத்தில் சுற்றிவந்தபோது, அத்தீவில் மக்கள் நிலையில் இடர் உள்ளதை உணர்ந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சாதனங்கள் விமானத்தில் இல்லாத நிலையில், உணவு, தண்ணீர் மற்றும் தொடர்புகொள்வதற்காக ஒரு தொலைத்தொடர்பு கருவி ஆகியவை அவர்களுக்கு விமானத்திலிருந்து பரசூட் மூலம் அனுப்பப்பட்டன.
தாம் கியூபாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தமது படகு மூழ்கியதையடுத்து, நீந்தி இத்தீவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை ஹெலிகொப்டர் மூலம் புளொரிடாவிலுள்ள மருத்துவ நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்னர். பின்னர் அவர்கள் அமெரிக்கக குடிவரவு மறறும் சுங்க அமுலாக்கல் பிரிவினரிடம் அனுப்பப்பட்டனர் என அமெரிக்க விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.