பொத்துவில் முதல் பொலிகண்டிவரை இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று நீதிமன்றக் கட்டளையை மீறினார் என யாழ். மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக மன்னார் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே பேரணிக்குத் தடைகோரி ‘ஏ’ அறிக்கை மூலம் மன்னார் பொலிஸ் நிலையத்தால் தொடரப்பட்ட வழக்குக்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ‘பி’ அறிக்கை மூலம் பேரணியில் கலந்துகொண்ட யாழ். மாநகர சபை முதல்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மட்டுமே பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (15.02.2021) விசாரணைக்கு எடுக்கப்பட்டு தவணையிடப்பட்டது.