மட்டக்களப்பு- மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில், பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அத்துமீறி அபகரிக்கப்படுவது தொடர்பான வழக்கு 22/01/2021 அன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பிரதிவாதிகளும் மேய்ச்சல் தரையில் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.இதன்போது, மேய்ச்சல் தரையில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அவர்கள் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ரட்ணவேல் அந்த விடயங்கள் தொடர்பான சமர்ப்பணங்களைச் செய்திருந்தார்.
அதனை நடைமுறைப்படுத்துவதாகவும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளை அறிவுறுத்துவதாகவும், அரச சட்டத்தரணி நீதிமன்றுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
இதனைவிட, தற்போது மேய்ச்சல் தரை அபகரிப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பகுதியைத் தவிர, அப்பகுதியில் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க கூடாது என்ற நிபந்தனைக்கு அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும், வேறு எந்தச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாது எனவும், உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை எதிர்வரும் மார்ச் ஐந்தாம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.