அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தனவின் தலைமையிலான மூவர் கொண்ட இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
1978 ஆம் ஆண்டின் விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட தேசிய அரசுப் பேரவையின் 7 ஆம் இலக்க விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய இந்த ஆணைக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக 2021 ஜனவரி 29 ஆம் திகதியிடப்பட்ட 2212/53 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்கமையவே இந்த ஆணைக் குழு, ஜனாதிபதியால் தனக்குள்ள அதிகாரத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்புகளுக்கு அமைய வழங்க வேண்டிய தண்டனைகளை குறிப்பிட்டு இறுதி அறிக்கை அல்லது இடைக்கால அறிக்கையொன்றை தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, தாம் நியமித்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.