மியன்மாரில் இராணுவப் புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது படையினரால் சுடப்பட்ட யுவதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மியா த்வாதே த்வாதே கெய்ங் (Mya Thwate Thwate Khaing ) எனும் 20 வயது யுவதியே உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட மியன்மார் இராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த முதல் நபர் இவராவார்.
கடந்த 9 ஆம் திகதி மியன்மார் தலைநகர் நெய்பிடோபில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். இதில் காயமடைந்த மியா த்வாதே த்வாதே கெய்ங் இன்று வெள்ளிக்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வைத்தியசாலையில் உணர்விழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கடந்த 11 ஆம் திகதிதான் 20 வயதை அடைந்தார். குறிப்பிடத்தக்கது. பர்மா எனவும் அழைக்கப்படும் மியன்மாரில் பெப்ரவரி முதலாம் திகதி இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி ஜனாதிபதி வின் மியின்ட் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைய சேவைகளும் இராணுவ ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராணுவப் புரட்சிக்கு எதிராக கடந்த 3 நாட்களாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.