மிஸ் இந்தியா அழகுராணி போட்டியில் முச்சக்கர வாகன சாரதியொருவரின் மகளான மான்யா சிங் 3 ஆவது இடத்தைப் பெற்று பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மான்யா, உணவு விடுதியொன்றில் கோப்பை கழுவும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டே கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் இந்தியா 2020 அழகுராணி போட்டியின் இறுதிச் சுற்று கடந்த புதன்கிழமை மும்பையில் நடைபெற்றது.
இப்போட்டியில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானஷா வாரணாசி முதலிடம் பெற்றார். எதிர்வரும் உலக அழகுராணி போட்டியில் அவர் இந்தியாவின் சார்பில் பங்குபற்றவுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த மனீகா ஷோகந்த் இரண்டாமிடம் பெற்றார். மிஸ் கிராண்ட் அழகுராணி போட்டியில் இந்தியாவின் சார்பில் மனீகா பங்குபற்றவுள்ளார்.
மான்யா சிங், மானஷா வாரணாசி, மனீகா ஷோகந்த் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மான்யா சிங் இப்போட்டியில் 3 ஆவது இடத்தைப் பெற்றமை பலராலும் பாராட்டப்பட்டது. காரணம், மிக வறுமையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர் இவர்.
மான்யாவின் தந்தை ஒரு முச்சக்கர வாகன சாரதி. தனது இளமைக்காலத்தில், உணவோ முறையான உறக்கமோ இன்றி பல இரவுகளை கழித்ததாக மான்யா சிங் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மான்யா சிங் வெளியிட்ட பதிவில், ‘உணவோ உறக்கமோ இன்றி பல இரவுகளை நான் கழித்துள்ளேன். பல பிற்பகல்; வேலைகளில் கால்நடையாக நடந்து சென்றேன். எனது இரத்தம், வியர்வை, கண்ணீர் அனைத்தும் எனது ஆன்மாவுக்கான உணவாக அமைந்ததுடன் என் கனவுகளை நனவாக்க நான் உறுதிபூண்டேன். ஆட்டோ ரிக்ஷா சாரதியின் மகளான நிலையில் எனக்கு பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கவில்லை. எனது பதின்ம பருவத்திலேயே நான் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டியிருந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நான் அணிந்த ஆடைகள் அனைத்தும் மற்றவர்கள் பயன்படுத்தியவை. புத்தகங்களுக்காக நான் ஏங்கினேன். ஆனால், அதிஷ்டம் எனக்குச் சாதகமாக இருக்கவில்லை. இறுதியில், நான் பட்டம் பெறுவதற்காக, பரீட்சைக் கட்டணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு, எனது பெற்றோர் தம்மிடமிருந்த சொற்ப நகைகளை அடகு வைத்தனர். எனக்காக எனது தாயார் மிகவும் துன்பமுற்றார்.
14 வயதில் நான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன். எவ்வாறெனினும் பகல் வேளைகளில் நான் எனது பாடங்களை படிக்க முடிந்தது. ஏனெனில், கோப்பை கழுவுதல் வேலையை மாலை நேரத்தில் செய்ததுடன், கோல் சென்டரில் இரவிலும் வேலை செய்தேன்.
எனது தந்தை, தாய், எனது இளைய சகோதரர் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும், நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும் என்பதை உலகுக்கு காண்பிப்தற்காகவும் நான் பெமினா மிஸ் இந்தியா 2020 மேடைக்கு இன்று நான் வந்துள்ளேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய அழகுராணி போட்டியில் வென்ற மான்யா சிங், கடந்த வருடம் ‘மிஸ் இந்தியா உத்தரபிரதேஷ்’ அழகுராணியாக தெரிவாகியிருந்தார். 16 வயதிலேயே பீட்ஸா ஹட் உணவகம் ஒன்றில் அவர் பணியாற்ற ஆரம்பித்திருந்தார். உணவு விடுதியில் கோப்பைகளைக் கழுவுவதே அவரின் வேலையாக இருந்தது. பீட்ஸா ஹட்டில் வேலை செய்துகொண்டே 10 ஆம் வகுப்பு பரீட்சைக்குத் தோற்றிய மான்யா சராசரியாக 80 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.
மிஸ் இந்தியா அழகுராணி போட்டியில் தனக்கு கிடைத்த பரிசுப் பணம் மூலம் குடும்பத்துக்கு உதவுவதற்கு மான்யா திட்டமிட்டுள்ளார். அத்துடன் தொடர்ந்தும் மொடலிங்கில் ஈடுபடவும் அவர் தீர்மானித்துள்ளார்.
மான்யா சிங்க்கு இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் (2017) உலக அழகுராணி மனூஷி சில்லார், திரையுலக நட்சத்திரங்கள், வருண் தவான், எமி ஜக்சன், சமந்தா பிரபு ஆகியோரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.