2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தாக்குதலைப் போன்று, இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து விதமான கெடுதிகளிலிருந்தும் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்தருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன், குறித்த செய்தி தொடர்பிலான உண்மை நிலை பற்றி அறியாத போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களைக் காட்டிக் கொண்டு, மக்களைப் பிழையான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய, இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களின் எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் அமைப்புகளே ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஏனைய இஸ்லாமியப் பெயர் தாங்கிய பயங்கரவாத அமைப்புகளாகும்.
இவ்வாறான தீவிரவாத அமைப்புகள் விடயத்தில் விழிப்புடன் செயற்படவேண்டும். இந்த அமைப்புக்களின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பது ஆராயப்பட வேண்டிய அவசியமாகும்.
எனினும், இவை இஸ்லாத்திற்கு எதிரான தீவிரவாத அமைப்புகள் என்பதே உலக வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும் என்றும் உலமா சபை கோரியுள்ளது.